×

டிஸ்டோனியாவால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மூளை செயல்பாடு தூண்டும் அறுவை சிகிச்சை: ரேலா மருத்துவமனை சாதனை

தாம்பரம்: நாகர்கோவில் பகுதியை சேர்ந்தவர் சாந்தி ஹென்றி (57). இவருக்கு 3 ஆண்டுக்கு முன் திடீரென கழுத்து ஒரு பக்கமாக இழுத்துக்கொண்டது. அவரால் சாப்பிடவோ, பேசவோ முடியவில்லை. வலது கை செயல்பாடு இல்லாமல் விறைப்பாக மாறியது. உடலின் பல்வேறு உறுப்புகளும் அசைவற்ற நிலைக்கு சென்றதால் மிக கடுமையாக அவதிப்பட்டு, படுத்த படுக்கையானார். இதற்காக கேரளா, சென்னை உள்பட பல இடங்களில் சிகிச்சை பெற்ற பிறகு அவரது மகன் குரோம்பேட்டை ரேலா மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார்.

முன்னணி நரம்பியல் சிகிச்சை நிபுணரும், நுண்துளையீட்டு நரம்பியல் சிகிச்சை நிபுணருமான டாக்டர் சங்கர் பாலகிருஷ்ணன், நரம்பியல் அறுவை சிகிச்சை பிரிவு மூத்த ஆலோசகர் டாக்டர் அன்பு செல்வம், பேச்சு மற்றும் விழுங்குதல் நோயியல் நிபுணரும், நரம்பியல் பிசியோதெரபிஸ்ட் நிபுணருமான ஸ்ரீமதி நரசிம்மன் ஆகியோர் நோயாளியை பரிசோதித்து, ஸ்கேன் மற்றும் மரபணு சோதனைக்கு பிறகு அவருக்கு டிஸ்டோனியா என்னும் நரம்பு சம்பந்தமான நோய் இருப்பது கண்டறியப்பட்டது. இது ஒரு பொதுவான அரிய வகை மரபணு நோய். உலகில் லட்சத்தில் 16 பேரை மட்டுமே பாதிக்கிறது. தொடர்ந்து, அறுவை சிகிச்சை மூலம் சாந்தி ஹென்றியை மருத்துவர்கள் குணப்படுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து, டாக்டர் சங்கர் பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது டிஸ்டோனியா என்பது மிகவும் சிக்கலான உடல் இயக்க பிரச்சனை சார்ந்த நோய். அறுவை சிகிச்சை முடிந்து 2 நாட்களுக்கு பிறகு இந்த நோயாளிக்கு கழுத்து பகுதியில் தசைகள் இழுப்பது வெகுவாக குறைந்தது கண்டறியப்பட்டது. நியூரோஸ்டிமுலேட்டரின் புரோகிராமிங் முடிந்ததும் நோயாளி சாந்தியின் வாழ்க்கை நிலை வெகுவாக மேம்படும் என்று நம்புகிறோம். தமிழகத்தில் இந்த சிகிச்சை அரிய வகையாக உள்ள நிலையில் குறைந்தபட்சம் 20 லட்சம் வரை செலவாகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


Tags : Dystonia, Female, Stimulating Brain Activity, Surgery, Rela Hospital, Accomplishment
× RELATED பிளஸ் 1 பொது தேர்வில் மாநகராட்சி பள்ளி...